Monday, December 17, 2012

கிளிவிடு தூது..



மரகத மலை மேலே 
மனமு மிக மகிழ்ந்து 
சிறகடித் திருப்பாயடி -கிளியே 
சிறிது (நீ) செவி சாயடி   1

நாயகன் என் கண்ணன் உற்ற 
நகர் மீது நீ பறந்தால் 
நேயமுடன் எடுத்தோதடி -கிளியே 
நெஞ்சம்  எடுத்தோதடி   2

 




முன்னரவன் சோலைதனில் 
முத்தம் ஒன்று வைத்த பின்னே 
சொன்ன சொல்லை மறந்தானடி -கிளியே 
சோர்வு மிகவாச்சடி   3

கோலமுடன் பவனி வந்து 
கைத்தலம் பிடிப்பேன் என்றான் 
காலமிக  வாச்சுதடி -கிளியே 
காத்திருக்க லாகாதடி  4

பேயுமெனைப் பிடித்ததென 
பந்தமெல்லாம் நினைத்து விட்டார் 
போயவனுக் குரைப்பாயடி -கிளியே 
போக்கிடம் எனக்கேதடி   5


சூனியந்தான் வைத்தார் என்று 
சோதரியும் நினைந்து விட்டாள் 
சூனியக் காரனடி -கிளியே 
சூதகமாய் பேசடி   6

திருமணம் செய்வதற்கே 
தந்தையவர் எத்தனித்தால் 
சிறுமனம் பொறுக்காதடி -கிளியே 
சிறியவள் நிலை சொல்லடி   7

கட்டிய உடுக்கையுடன் 
கண்ணனை தொடர்வதென்று 
கட்டுறுதி ஏற்றேனடி  -கிளியே 
கடிதினில் நீ செல்லடி  8

 தயிர்வழிப் பின்தொடர்ந்து 
திருடிக் களித்தவன் தான் 
உயிர்வலி அறிவானோடி -கிளியே 
 உண்மைநிலை சொல்லடி 9 




மாதரின் உடைகவர்ந்து 
மரமேறி அமர்ந்தவன்தான் 
காதலை உணர்வானோடி -கிளியே 
கண்கள் பனிக்குதடி 10

கள்ளனைப் போல் நாளும்நாளும் 
களவாடித் திரிந்தவன்தான் 
உள்ளநோய் அறிவானோடி -கிளியே 
உள்ளதை எடுத்தோதடி  11
 




பெற்றவர்கள் சிறையிருக்க 
பாடிக் களித்தவர்க்கு 
மற்றவர்கள் பொருட்டோ அடி-கிளியே 
மனமிக நோகுதடி  12

ராதையினை மறந்துவிட்டு 
ராப்பொழுதில் கிளம்புவோர்க்கு 
பேதையிவள் பொருட்டோ அடி -கிளியே 
பேச்சு(ம்) குளறுதடி!  13


தக்க தருணத்தில் வந்து 
தவறாமல் காப்பேன் என்றான் 
மிக்க துயர் ஆச்சுதடி -கிளியே 
மீள வழியென்னடி 14

சுகந்தரும் சோலைதன்னில் 
சொக்கித் திரிந்ததெல்லாம் 
பகல்கனவாச்சுதடி -கிளியே 
பேதையின் நிலைசொல்லடி  15

தோடியிலும் கமாசிலும் 
தொழுது காம்போதியிலும் 
பாடியதை மறந்தானடி -கிளியே 
பாவியின் நிலை சொல்லடி  16


உறக்கம் வருவதில்லை 
உண்ணவும் இயலவில்லை 
இரக்கம் இலையோ அடி -கிளியே 
ஏழையின் நிலை சொல்லடி  17


ஒப்பனையில் மனம் இல்லை 
உடையில் கவனம் இல்லை 
கற்பனையில் ஆடுதடி -கிளியே 
கண்டநிலை சொல்லடி  18


பித்தம் பிடித்ததென்று 
பேசிடுவர் தோழியர்தாம் 
நித்தமொரு  கதையாச்சடி -கிளியே 
நிறுத்த வழியென்னடி  19






தாமத(மு)ம் செய்தான் என்றால் 
தாங்காது இதயமென்று
ஆமவனுக் கெடுத்தோதடி -கிளியே 
அழவும் இயலாதடி  20

காதலியைத் தவிக்கவிட்டு 
குவலயம் புரப்பதுதான் 
மாதவனுக் கழகோ அடி -கிளியே 
மனமதை எடுத்தோதடி  21

பூணுகிற அணி களைந்து 
பண்டவன் செய்ததை சொல்ல 
நாண மிகவாகுதடி  -கிளியே 
நல்லபடி நீ கூறடி 22
 
காலம் அதிகம் இல்லை 
கடிதில் வருக வென்பாய் 
சீலம் இழந்தேனடி -கிளியே 
சீக்கிரம் நீ செல்லடி 23

எப்படி எடுத்துரைப்பேன் 
யாரிடம் எடுத்துரைப்பேன் 
செப்படி வித்தையடி -கிளியே 
செய்தவன் அவன்தானடி  24

முகத்தில் உறும் நகையும் 
முகுந்தன் அவன் மொழியும் 
அகத்தை வதைக்குதடி -கிளியே 
ஆவியும் வேகுதடி  25
 
சுழலில் இருத்தி விட்டான் 
சுகத்தைப் பறித்துவிட்டான்  
கழலில் விழுந்தேனடி -கிளியே 
கடிதில் வரச்சொல்லடி 26


தாமரைத் திருவிழியும் 
தேன்வடியும் உதடும் 
சாமத்தில் வாட்டுதடி -கிளியே 
சொல்லவியலாதடி 27




பாவையிவள் கண்ணீருக்கு 
பதில் உரைத்திடனும் என்றே 
கூவி நீ உரைப்பாயடி -கிளியே 
காதில் உரைப்பாயடி 28

கலவரம் ஆச்சுதடி 
கண்கள் மயங்குதடி -
நிலவரம் உரைப்பாயடி -கிளியே 
நெஞ்சம் உரைப்பாயடி 29

கண்ணன் என்னை எண்ணாவண்ணம் 
கன்னியர்கள் தடுத்தனரோ 
என்ன தெரியுமடி -கிளியே 
ஏழையும் ஆனேனடி  30

அய்யன் அவன் கண்ணயர்ந்து 
அமளியில் உறங்குகையில் 
பையநீ புகல்வாயடி -கிளியே 
பார்த்ததை சொல்வாயடி 31

பண்டொருநாள் பிரிந்துசென்ற 
பாவையின் றவனை  எண்ணி 
கொண்ட தவம் சொல்வாயடி -கிளியே 
கோலமும் சொல்வாயடி 32

எப்பொழுதவன் வருவான் 
எப்பொழுதருள் தருவான் 
முப்பொழுதும் தவித்தேனடி -கிளியே 
 மொத்தமும் சொல்வாயடி 33

இனிச்சொல்ல ஏதும் இல்லை  
இதயமும் தாளவில்லை 
னிச்சொல்லில் நீ சொல்லடி -கிளியே 
கண்டதை எடுத்தோதடி  34

நீயும் சென்று திரும்பிடுவாய் 
நல்ல சேதி கொணர்திடுவாய் 
மாயவனின் நகர் செல்லடி -கிளியே 
மங்கையென் நிலை சொல்லடி 35
















 

No comments:

Post a Comment