மரகத மலை மேலே
மனமு மிக மகிழ்ந்து
சிறகடித் திருப்பாயடி -கிளியே
சிறிது (நீ) செவி சாயடி 1
நாயகன் என் கண்ணன் உற்ற
நகர் மீது நீ பறந்தால்
நேயமுடன் எடுத்தோதடி -கிளியே
நெஞ்சம் எடுத்தோதடி 2
முன்னரவன் சோலைதனில்
முத்தம் ஒன்று வைத்த பின்னே
சொன்ன சொல்லை மறந்தானடி -கிளியே
சோர்வு மிகவாச்சடி 3
கோலமுடன் பவனி வந்து
கைத்தலம் பிடிப்பேன் என்றான்
காலமிக வாச்சுதடி -கிளியே
காத்திருக்க லாகாதடி 4
பேயுமெனைப் பிடித்ததென
பந்தமெல்லாம் நினைத்து விட்டார்
போயவனுக் குரைப்பாயடி -கிளியே
போக்கிடம் எனக்கேதடி 5
சூனியந்தான் வைத்தார் என்று
சோதரியும் நினைந்து விட்டாள்
சூனியக் காரனடி -கிளியே
சூதகமாய் பேசடி 6
திருமணம் செய்வதற்கே
தந்தையவர் எத்தனித்தால்
சிறுமனம் பொறுக்காதடி -கிளியே
சிறியவள் நிலை சொல்லடி 7
கட்டிய உடுக்கையுடன்
கண்ணனை தொடர்வதென்று
கட்டுறுதி ஏற்றேனடி -கிளியே
கடிதினில் நீ செல்லடி 8
தயிர்வழிப் பின்தொடர்ந்து
திருடிக் களித்தவன் தான்
உயிர்வலி அறிவானோடி -கிளியே
உண்மைநிலை சொல்லடி 9
மாதரின் உடைகவர்ந்து
மரமேறி அமர்ந்தவன்தான்
காதலை உணர்வானோடி -கிளியே
கண்கள் பனிக்குதடி 10
கள்ளனைப் போல் நாளும்நாளும்
களவாடித் திரிந்தவன்தான்
உள்ளநோய் அறிவானோடி -கிளியே
உள்ளதை எடுத்தோதடி 11
பெற்றவர்கள் சிறையிருக்க
பாடிக் களித்தவர்க்கு
மற்றவர்கள் பொருட்டோ அடி-கிளியே
மனமிக நோகுதடி 12
ராதையினை மறந்துவிட்டு
ராப்பொழுதில் கிளம்புவோர்க்கு
பேதையிவள் பொருட்டோ அடி -கிளியே
பேச்சு(ம்) குளறுதடி! 13
தக்க தருணத்தில் வந்து
தவறாமல் காப்பேன் என்றான்
மிக்க துயர் ஆச்சுதடி -கிளியே
மீள வழியென்னடி 14
சுகந்தரும் சோலைதன்னில்
சொக்கித் திரிந்ததெல்லாம்
பகல்கனவாச்சுதடி -கிளியே
பேதையின் நிலைசொல்லடி 15
தோடியிலும் கமாசிலும்
தொழுது காம்போதியிலும்
பாடியதை மறந்தானடி -கிளியே
பாவியின் நிலை சொல்லடி 16
உறக்கம் வருவதில்லை
உண்ணவும் இயலவில்லை
இரக்கம் இலையோ அடி -கிளியே
ஏழையின் நிலை சொல்லடி 17
ஒப்பனையில் மனம் இல்லை
உடையில் கவனம் இல்லை
கற்பனையில் ஆடுதடி -கிளியே
கண்டநிலை சொல்லடி 18
பித்தம் பிடித்ததென்று
பேசிடுவர் தோழியர்தாம்
நித்தமொரு கதையாச்சடி -கிளியே
நிறுத்த வழியென்னடி 19
தாமத(மு)ம் செய்தான் என்றால்
தாங்காது இதயமென்று
ஆமவனுக் கெடுத்தோதடி -கிளியே
அழவும் இயலாதடி 20
காதலியைத் தவிக்கவிட்டு
குவலயம் புரப்பதுதான்
மாதவனுக் கழகோ அடி -கிளியே
மனமதை எடுத்தோதடி 21
பூணுகிற அணி களைந்து
பண்டவன் செய்ததை சொல்ல
நாண மிகவாகுதடி -கிளியே
நல்லபடி நீ கூறடி 22
காலம் அதிகம் இல்லை
கடிதில் வருக வென்பாய்
சீலம் இழந்தேனடி -கிளியே
சீக்கிரம் நீ செல்லடி 23
எப்படி எடுத்துரைப்பேன்
யாரிடம் எடுத்துரைப்பேன்
செப்படி வித்தையடி -கிளியே
செய்தவன் அவன்தானடி 24
முகத்தில் உறும் நகையும்
முகுந்தன் அவன் மொழியும்
அகத்தை வதைக்குதடி -கிளியே
ஆவியும் வேகுதடி 25
சுழலில் இருத்தி விட்டான்
சுகத்தைப் பறித்துவிட்டான்
கழலில் விழுந்தேனடி -கிளியே
கடிதில் வரச்சொல்லடி 26
தாமரைத் திருவிழியும்
தேன்வடியும் உதடும்
சாமத்தில் வாட்டுதடி -கிளியே
சொல்லவியலாதடி 27
பாவையிவள் கண்ணீருக்கு
பதில் உரைத்திடனும் என்றே
கூவி நீ உரைப்பாயடி -கிளியே
காதில் உரைப்பாயடி 28
கலவரம் ஆச்சுதடி
கண்கள் மயங்குதடி -
நிலவரம் உரைப்பாயடி -கிளியே
நெஞ்சம் உரைப்பாயடி 29
கண்ணன் என்னை எண்ணாவண்ணம்
கன்னியர்கள் தடுத்தனரோ
என்ன தெரியுமடி -கிளியே
ஏழையும் ஆனேனடி 30
அய்யன் அவன் கண்ணயர்ந்து
அமளியில் உறங்குகையில்
பையநீ புகல்வாயடி -கிளியே
பார்த்ததை சொல்வாயடி 31
பண்டொருநாள் பிரிந்துசென்ற
பாவையின் றவனை எண்ணி
கொண்ட தவம் சொல்வாயடி -கிளியே
கோலமும் சொல்வாயடி 32
எப்பொழுதவன் வருவான்
எப்பொழுதருள் தருவான்
முப்பொழுதும் தவித்தேனடி -கிளியே
மொத்தமும் சொல்வாயடி 33
இனிச்சொல்ல ஏதும் இல்லை
இதயமும் தாளவில்லை
கனிச்சொல்லில் நீ சொல்லடி -கிளியே
கண்டதை எடுத்தோதடி 34
நீயும் சென்று திரும்பிடுவாய்
நல்ல சேதி கொணர்திடுவாய்
மாயவனின் நகர் செல்லடி -கிளியே
மங்கையென் நிலை சொல்லடி 35